பக்தர்களுக்கு வசதிகள்

தோரணமலையில் பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ஒரு காலத்தில் இத்தலத்தில் படர்ந்து வளர்ந்திருக்கும் ஆல மரங்களும் அத்தி மரங்களும்தான் பக்தர்கள் இளைப்பாற உதவியது. மழை பெய்தால் அவர்கள் நனைவார்கள். ஆனால் இப்போது பக்தர்கள் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் சன்னதிக்கு தென்புறம் விசாலமான மண்டபமும், வடபுறம் இன்னொரு மண்டமும் உள்ளன.
முன்பெல்லாம் பக்தர்கள் குடிக்க சுனை நீரை மட்டுமே பயன்படுத்தி வந்தனர். மலை அடிவாரத்தில் உள்ள சுனைகள் பெரும்கோடையில் வறண்டு விடும். இந்த குறையை போக்கும் வண்ணம் கோவில் வளாகத்தில் பெரிய கிணறு தோண்டப்பட்டு தண்ணீர் தடையின்றி கிடைக்கிறது. பக்தர்கள் நீராடவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக கழிவறை வசதி இருக்கிறது.
இங்கு காலையிலும் மதியமும் அன்னதானம் நடைபெறுகிறது. நேர்த்திகடனுக்காக பொங்கல் வைக்கவும் வசதிகள் உள்ளன. தனிப்பட்ட முறையில் பொங்கி சாப்பிடவும் வசதிகள் உள்ளன.
இதுதவிர தேனீர், .குளிர்பான கடைகள், தேங்காய் பழம் விற்பனைக் கடைகள் உள்ளன.
மலை ஏறும்போது நிழல்கள் தரும் மரங்கள் பல உள்ளன. அது தவிர வழியில் ஆறு இடங்களில் இளைப்பாறும் மண்டபங்கள் அழகுடன் அமைக்கப்பட்டு உள்ளன.