விநாயகர் சன்னதியின் அமைப்பு

எல்லா முருகன் மலைக்கோவிலிலும் அடிவாரத்தில் விநாயகர் இருப்பார். அதேபோல் தோரண மலையின் அடிவாரத்திலும் விநாயகர் பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது. ஆனால் மற்ற கோவில்களில் எல்லாம் பெயரளவுக்குத்தான் விநாயகர் சன்னதி இருக்கும். அதாவது முருகனை வழிபட செல்லும்முன் அவரது அண்ணனும் முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த விநாயகரை அமைத்து இருப்பார்கள். ஆனால் தோரணமலையை பொறுத்தவரை மலைமேல் உள்ள முருகன் சன்னதிக்கு எந்த விதத்திலும் குறையாத வகையில் விநாயகர் சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது. இன்னும் சொல்லப்போனால் முருகனைவிட அதி முக்கியத்துவம் பெற்று விளங்குகிறார், இங்குள்ள விநாயகர்.
அவருக்கு வல்லப விநாயகர் என்று பெயர். அமர்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இவர் அருள்பாலிக்கிறார். அந்த காலத்தில் இங்கும் விநாயகர் சன்னதி மட்டுமே இருந்துள்ளது. அதன்பின் சன்னதிமுன்பு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. அந்த மண்டபத்தின் முன்பு இரண்டு யானைகள் நம்மை வரவேற்பது போல் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மண்டபத்தில் முன்பு இடதுபுறம் தேங்காய் சூறை (விடலை) போடுவதற்கான தொட்டி கட்டப்பட்டு உள்ளது. சன்னதியை சுற்றி பிரகாரம் சிறப்புற அமைக்கப்பட்டு உள்ளது. விநாயகர் சன்னதிக்கு தென்கிழக்கு பகுதியில் மடப்பள்ளி கட்டப்பட்டு உள்ளது.
அந்த விநாயகர் சன்னதியில்தான் வள்ளி&தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், நடராஜர் உற்சவர்கள் உள்ளனர். (இந்த உற்சவர்களுக்காக தனி சன்னதி கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.



முருகன் சன்னதியின் அமைப்பு

தோரணமலை முருகன் சன்னதி மனித கட்டுமானத்தில் உருவானது அல்ல. இயற்கையாக அமைந்த குகைளே மூலஸ்தானம். பெரும் பாறையின் இடையே அமைந்த இந்த குகை போகப்போ சுருங்கிக்கொண்டே செல்கிறது. அதன் முடிவு பற்றி யாரும் அறியார். பொதுவாக பெரும்பாலான கோவில்கள் கிழக்கு நோக்கியே இருக்கும். அந்த வகையில் இந்த குகை சன்னதியும் கிழக்கு நோக்கிதான் அமைந்துள்ளது. அந்த சன்னதியில் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். காலையில் இந்த முருகனை சூரியன் தன் ஒளிக் கதிர் என்னும் கரங்களால் தொட்டு வழிபடுகிறார்.
கோவில் பாதுகாப்புக்காக குகை சன்னதியின் முகப்பு பகுதியில் செங்கல்கற்களால் சுவர் அமைத்து கதவு போடப்பட்டு உள்ளது. ஆரம்பத்தில் முருகனை வழிபட செல்லும் பக்தர்களின் வசதிக்காக அந்த சன்னதியின் முன்பு சிமெண்டினால் தளம் அமைத்து உயர்த்தப்பட்டிருந்தது. அதன்பின் சன்னதி முன்பு சிறிய அளவிலான மண்டபம் கட்டுப்பட்டது. அந்த மண்டபத்தில் முருகனுக்கு நேர் எதிரே மயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இக்கிறது. அந்த மண்டபத்தில் நின்று பக்தர்கள் வழிபடலாம். அந்த மண்டபத்தில் பக்தர்கள் நேர்த்திகடனாக வழங்கி மணிகள் பல தொங்கவிடப்பட்டு உள்ளன.



மற்ற சன்னதிகள்

தோரணமலையின் உச்சியில் முருகனுக்கும், அடிவாரத்தில் விநாயகருக்கும் பிரதான சன்னதிகள் உள்ளன. மலை உச்சியில் கீழக்கு திசையில் பத்திரகாளி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. பத்திரகாளிஅம்மன் வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அந்த சன்னதியை சுற்றி வந்து வழிபட வசதி உள்ளது. தோரணமலையை வெகு தூரத்தில் இருந்து பார்க்கும்போது இந்த சன்னதிதான் நம் கண்ணுக்குத் தெரியும்.
மலைமீதுள்ள முருகன் கோவில்களில் எல்லாம் முருகனின் பாதம் அமையபெற்று இருக்-கும். அதேபோல் இங்கும் மலையின் மேல் பாறையில் பாதச் சுவடுகள் செதுக்கப்பட்டு உள்ளன. முருகன் ஒரு பாதத்தை நேராக பதித்தபோலவும், இன்னொரு காலின் முட்டை பதித்திருப்பது போலவும், வேல் ஊன்றிய குழியும் அங்கே காணப்படுகிறது. இதனை சுற்றி சன்னதி அமைக்கும் மேற்கொள்ளப்பட்டு ஏதோ காரணத்தால் பணி நிறைவுபெறாமல் நின்றுபோனது.
மலை அடிவாரத்தில் விநாயகர் சன்னதிக்குப் பின்புறம் ஒரு பாறையில் பாலமுருகன் சன்னதி உள்ளது. அந்த முருகன் சுதையாக வடிவமைக்கப்பட்டு அழகிய வண்ணத்தில் காட்சி தருகிறார். அந்த சன்னதிக்கு செல்ல படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதைப்பார்க்கும்போது இதுவும் ஒரு தனி முருகன் மலையோ என்று எண்ணத்தோன்றும். மலை ஏற முடியாதவர்கள் இந்த முருகனை வணங்கிவிட்டு வருகிறார்கள்.
விநாயகர் சன்னதிக்கு வடபுறம் இரண்டு சுனைகள் உள்ளன. அந்த இரண்டு சுனைக்கு அருகேயும் சப்த கன்னியர்கள் சிலை உள்ளது. இதில் வடபுறம் உள்ள சப்த கன்னியருக்கு தனி சன்னதியும் பிரகாரமும் அமைக்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சன்னதிக்கு கிழக்கே ஈசான மூலையில் நவக்கிரக சன்னதி உள்ளது. இங்கும் பக்தர்கள் சுற்றி வந்து வழிபட வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதவிர கோவிலின் வடபுறம் சிவன், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் சுதை வடிவில் அருள்பாலிக்கிறார்கள். இந்த சிலைகள் கண்ணுக்கு அழகாக வண்ணத்தில் அமைந்துள்ளன.
மலைப்பாதையில் ஓரிடத்தில் சிறிய ஊற்று வடிவில் சுனை ஒன்று ஒன்று இருகிறது. அந்த இடத்தில் சிறிய சிவலிங்கம் இருக்கிறது. அதேபோல் மலை ஏறும் பக்தர்கள் களைப்படையாமல் இருக்க வழியில் ஓரிடத்தில் வழிபடுவதற்கு பீடம் அமைத்துள்ளார்கள்.