கோவிலின் பெருமை

நாம் பாடம் படிக்க பள்ளிகளையும், கல்லூரிகளையும் பல்கலைக்கழங்களையும் நாடுவது இன்றைய காலமுறையாக உள்ளது. இதற்கு முந்தைய காலத்தில் திண்ணையிலும் மர நிழல்களிலும் மண்ணிலும் அமர்ந்து பாடம் கற்றார்கள். அதற்கும் முற்பட்ட காலங்களில் குருகுலம்தான் பள்ளிக்கூடங் களாகவும் கல்விச்சாலை களாகவும் திகழ்ந்தன. அக்காலக் கட்டங்களில் ஆதாவது ஆதியில் மலையும் மலைசார்ந்த இடங்களும்தான் பாட சாலைகளின் அமைவிடமாக விளங்கின. அந்த வகையில் உலகிலேயே முதல் மருத்துவ பாடசாலை தொடங்கப்பட்ட இடமே தோரணமலை என்று தோரணகிரியாகும்.
இதைக் கேள்விப்படும்போதே நமககு ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா?
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல் வேலி மாவட்டம் கடையம் அருகேதான் இந்த தோரணமலை என்ற தோரணகிரி உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக்கோயிலில் முருகப் பெருமான் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். இறையருளும் மூலிகை வாசமும் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலக் கட்டத்தில் பல பட்டங்கள் வழங்கும் மருத்துவ பாடசாலையாகவும் ஆராய்ச்சி மையமாகவும் விளங்கியது என்கிறார் சித்தர்கள் மற்றும் சித்தமருத்துவ ஆராய்ச்சியாளர் எஸ்.கே.டி.பி.காமராஜ் அவர்கள்.
கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி. கும்பமுனி, அகத்தீசர் என்று அழைக்கப்படும் அகத்தியர் ஆவார். இவர் வட திசையில் இருந்து தென்திசை வந்து அமர்ந்தபோது ஆதி மொழி என்னும் மூல முதல் மொழியாம் தமிழ் மொழியை உபதேசித்தவர் தட்சிணாமூர்த்தி என்ற சிவபெருமானே ஆவார்.
பின் பொதிகை மலையில் அகத்தியர் ஞான நிலையில் இருந்தபோது தமிழ் கடவுளாகிய குமரக்கடவுள் எனும் முருகப்பெருமானிடமும் தமிழை கற்று பிரணவத்தின் பொருள் அறிந்து அகத்தியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலை இயன்றினார். பின் அதனை பின்பற்றிதான் தொல்காப்பியர் தமிழு க்கு இலக்கண நூல் தந்தார். தற்போது அகத்தியம் கண்ணில் படாமல் போனாலும் அவரது சீடர் தொல்காப்பியரின் படைப்பே தமிழ் இலக்கணத்துக்கு இன்றும் பாடமாக விளங்குகிறது.
தமிழுக்கு இலக்கணம் வகுத்த அகத்தியர் உலக மக்கள் நோய் நொடியின்றி வாழ தமிழ் மருத்துவம் என்ற சித்த மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ் மருத்துவம் என்பது இந்த கால மருத்துவப் படிப்பை போல் கிடையாது. இந்த மண் முதல் விண் வரை உலக இயகத்தின் அனைத்து தத்துவங்கயையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான் ஒருவர் முழு சித்த மருத்துவ பண்டிதன் ஆக முடியும். இதற்காக அகத்தியர் ஒரு லட்சத்துக்கும் மேலான கிரகந்தங்களை வகுத்து தந்துள்ளார். அவர், தான் ஆய்ந்து அறிந்த மருத்துவ குறிப்புகளையும் மூலிகை குறிப்புகளையும் பாசான குறிப்புகளையும் கொண்டு “அகத்திய வைத்திய சேகரம்” என்ற நூலை நமக்குத் தந்து அருளி யுள்ளார்.
அகத்தியரிடம் பாடம் கற்ற பல சீடர்கள் உண்டு. அவர்களில் சிறந்த சீடர்களை வானவியல், , மண்ணியல், கணிதவியல், வேதியியல், தாவரவியல் என பல்வேறு துறையை பற்றி ஆராய்ச்சியை செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின் படி சித்த மருத்துவ பாடத்திட்டங் களையும் அகத்தியர் வகுத்தார். அந்த பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கண இலக்கியம் கற்பதே முதல் பாடமாக அமைத்தார். அதன்பின் பீச கணிதம் மற்றும் சித்த மருத்துவ ஆய்வு வகைகளும், வானவியல் சாஸ்திரங்களும், இரு நிலை பிரிவாக, மலை வாடகமும், மூலிகை வாடகமும், பாடான வாடகமும், மூலிகை மூலாதார தத்துவம், இரசாயன ஆய்வும்& அதன் அனுபவ பயிற்சியும், மூலிகை &பாடான சுத்திமுறைகளும், அனுபான முறைகளும், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோக பற்பம், சங்கு பற்பம் போன்ற மருந்து முறைகளும் சித்த மருத்துவ சிகிச்சை முறைகளும், திரிநிலையில் தாவர சமூலங்களும், தைல முறைகளும் லேகிய முறைகளும், சூரண முறைகளும் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.
மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், இரணவாடகம், உடல் தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற பாடத் திட்டங்களும் உண்டு. இதுதவிர ஆறு ஆதார நிலைகள் மற்றும் சரியை, கிரியை, ஞானம் என அனைத்து நிலைகளும் கற்று கொடுக்கப் பட்டது என்று ஆராய்ச்சியாளர் காமராஜ் அவர்கள் தெரிவிக்கிறார்.
இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்தப் பின்னர் அகத்தியர் தோரணமலை எனும் தோரணகிரியில் சித்த மருத்துவ பண்டித பாடசாலையை தொடங்கினார். இதை விளக்கும் பாடல் அகத்திய வைத்திய சேகரத்தில் உள்ளது.
தோரணமலை என்ற தோரணகிரி பயிற்சி கூடத்தில் சீனா உள்பட உலகின் பல்வேறு இடங்களில் இருந்து தமிழ் மருத்துவம் பயில சீடர்கள் பலர் வந்தனர். இந்த தோரணகிரியையே தலைமை இடமாக கொண்டு நாடுகள் தனில் ஐந்த சபைகள் உருவாக்கப்பட்டது. அவைகளை சிவன் நின்று நடனம் புரிந்த திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பகுதிகள். அங்கு ஆராய்ச்சி சபைகள் நிறுவப்பட்டன. அவற்றிக்கு கிளைகளாக பல்வேறு பகுதிகளில் பண்டித பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. அவையே இலஞ்சி என்றும் மருதமலை என்றும் ஆவினன்குடி(பழனி) என்றும் கொள்ளிமலை என்றும் சித்தர்குகை என்றும் அவன் அவளாய் நின்ற மலை என்றும் அழைக்கப்பட்டன.
இந்த பாடசாலையில் ஆறு ஆறு ஆண்டுகளாக இரு நிலையாக பாடங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் தனித்தனியே பண்டித மருத்துவப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்த காலக்கட்டத்தில்தான் மன்னன் காசிவர்மனுக்கு தீராத தலைவலிக்காக அகத்தியர் கபால அறுவை சிகிச்சை செய்தார். அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்த சீடர் தேரையரை அகத்தியர் மூலிகை ஆராய்ச்சி செய்யுமாறு பணித்தார். அவரும் தோரணமலையில் தோரணகிரியில் தங்கி இருந்து ஆசிரமம் அமைத்து மூலிகைகளை ஆராய்ச்சி செய்து சிறந்த மருத்துவ சேவை செய்து வந்தார். அப்போது அகத்தியரின் வேண்டுகோளை ஏற்று தேரையர் தமிழ் கடவுளாம் திருமுருக கடவுளுக்கு சிலை வடித்து வணங்கி வந்தார். அதன்பின் தோரணகிரியிலேயே தேரையர் சமாதி நிலையை அடைந்தார்