தோரணமலையின் வளர்ச்சி
முருகப்பெருமான் சன்னதி முன்பு நடந்த மகத்தான திருப்பணி
தோரணமலை அடிவாரம் மரங்கள் அடர்ந்து சோலை போல் காட்சி அளிக்கும். அந்த சோலையில் மலை அடிவாரத்தில்தான் விநாயகர் தனி கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார். ஆனால் முருகன் குடிகொண்டிருக்கும் மலை உச்சியில் மரங்கள் அதிகம் இல்லை. முருகனின் அருளுக்கு பஞ்சம் இல்லை என்றாலும் நிழலுக்கு பற்றாக்குறையாகவே உள்ளது. அந்த காலத்தில் படிக்கட்டுக்கள் எல்லாம் கிடையாது. பக்தர்களின் பாதசுவடுகள் வகுத்த பாதையில் தட்டுத்தடுமாறி மலை ஏற வேண்டும். வழியில் சிறு சிறு புதர் நிழலில் சற்று இளைப்பாறி சென்றாலும் மலை ஏறியவுடன் வியர்த்து கொட்டும். மூச்சிறைக்கும். ஆனாலும் அங்கே முதலில் நம்மை வரவேற்பது முருகன்தான். பக்தர்கள் முகத்தை இடதுபுறம் திருப்பி முருகப்பெருமானை லேசாக வணங்கிவிட்டு, உடலை இன்னும் தூய்மையாக்கிவிட்டு (குளித்துவிட்டு) உன்னை வணங்க வருகிறேன் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு மலை உச்சியில் இருக்கும் சுனைக்கு சென்றுவிடுவார்கள். அங்கே குளித்துவிட்டு நேராக முருகன் சன்னதிக்கு வருவார்கள். முருகன் இருக்கும் குகை குளிர்ச்சியாக இருந்தாலும் பக்தர்கள் வெயிலில் நின்றுதான் தரிசனம் செய்ய வேண்டும். மனம் முருகனை லயித்து இருந்தாலும் பக்தர்களின் பாதத்தை வெயில் பாடாய் படுத்தும்.
இதனை கண்ட ஓர் அன்பர் வேதனை அடைந்தார். “முருகா உன்னை வணங்குவோர் வெயிலில் இப்படி கஷ்டப்பட வேண்டுமா? உன் அருள் எனக்கு இருந்தால் நானே பக்தர்கள் நின்று வழிடும் இடத்தில் மேற்கூரை அமைக்கிறேன்” என்று மனதுக்குள் வேண்டினார்.
அந்த அன்பர்தான் ராஜபாளையம் சக்திவேல் ராஜா. தொழில் அதிபரான அவர் ராஜபாளையம் லட்சுமி மகால் திருமண மண்டபத்தின் உரிமையாளர். பல சினிமா தியேட்டர்களை நடத்தி வருகிறார்.
அவர் முருகன் சன்னதி முன்பு மேற்கூரை அமைக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை கோவில் நிர்வாகி ஆதிநாராயணன் அவர்களிடம் தெரிவித்தார். இறைபணியே உயிர் மூச்சாக கொண்ட ஆதி நாராயணனுக்கு இந்த சொல் பேரானந்தத்தை ஏற்படுத்தியது. முருகப்பெருமானே வந்து உதவுவாக நினைத்தார். அதற்கான செலவுத் தொகை முழுவதையும் சக்திவேல் ராஜா கொடுக்க, பணி தொடங்கியது. மலையின் அடிவாரத்தில் இருந்து செங்கல் சிமெண்டு போன்றவற்றை தலைசுமையாக எடுத்துச் சென்று பணியை மேற்கொண்டனர். முருகன் சன்னதி முன்பு பக்தர்கள் நின்று வழிபட தளம் அமைத்து நிழலுக்காக மேற்கூரையும் அமைக்கப்பட்டது. அதன்பின் பக்தர்கள் எந்த இயற்கை இடையூறும் இன்றி முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்த உதவி செய்யும் பாக்கியத்தை அளித்த சக்திவேல் ராஜா முருகனுக்கு நன்றி சொல்கிறார். அவர் நம்மோடு முருகப்பெருமானின் அருளை பகிர்ந்து கொண்டார்....
நான் அப்போது ராஜபாளையத்தில் சினிமா தியேட்டர்களில் கேன்டீன் நடத்தி வந்தேன். இந்த கோவில் நிர்வாகி ஆதிநாராயணன் அவர்கள் சினிமா தியேட்டர்களில் கோவில்பற்றி சிலேடு போடுவதற்காக வந்தார். அப்போது எனக்கு அறிமுகமானார். தோரணமலை முருகனைப் பற்றி பெருமையாக கூறுவார். அந்த முருகனை தரிசனம் செய்ய ஆசைப்பட்டேன். ஒரு கடைசி வெள்ளி அன்று சென்றேன். மலைமீது ஏறி முருகனே கண்டேன். என்னையும் அறியாமல் புத்துணர்வை கண்டேன். அன்றிலிருந்து கடைசி வெள்ளிதோறும் அங்கு சென்று முருகனை தரிசித்த வந்தேன். அதன்பின் என் வாழ்க்கையிலும் வளம் மேலும் மேலும் அதிகரித்தது. தொழிலும் விருத்தி அடைந்தது. இப்போது எனக்கு 62 வயதாகி விட்டது. முன்பு போல் அடிக்கடி கோவிலுக்கு செல்ல முடியவில்லை. ஆனால் எனது மகன் தற்போது தவறாமல் தோரணமலை சென்று வருகிறான்.
தோரணமலை முருகன் என் மனதில் குடிகொண்டு ஆட்சி செய்கிறான். அவனை நினைத்தாலே வந்துவிடுவான். என்னைப்போல் எல்லோரும் முருகனை வழிபட்டு வாழ்வில் முன்னேற வேண்டுகிறேன்.
இப்படி கூறும் சக்திவேல்ராஜாவின் திருப்பணி என்றென்றும் பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுவிட்டது.