இறைபணியில் ஆதிநாராயணன்
1970 ஆம் ஆண்டு ஆதிநாராயணன் அவர்கள் தோரணமலை கோயில் நிர்வாகியாக பொறுப்பு ஏற்றார். பள்ளிக்கூட ஆசிரியரான அவர் வேலைநேரம் தவிர மற்ற நேரங்களை தோரணமலை யிலேயே கழித்தார். கடையம் சுற்று வட்டாரத்திற்கு மட்டும் தெரிந்த அந்த கோயிலை பிரபல படுத்த எண்ணினார். அதற்கு என்னவழி என்று சிந்தித்தார்.
அப்போதெல்லாம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே சினிமா தியேட்டர்களில் தோரணமலை முருகன் பற்றிய சிலேடுகளை போட ஏற்பாடு செய்தார். இதற்காக அவர் தான் வைத்திருந்த சைக்கிளிலேயே பயணம் செய்வார்.
ஒவ்வொரு சினிமா தியேட்டருக்கும் சென்று அதன் உரிமையாளரிடம், “நான் தோரணமலையில் இருந்து வருகிறேன்” என்பார். அதற்கு நன்கொடை ஏதும் வேண்டுமா என்று கேட்டபார்கள். “பணம் ஏதும் வேண்டாம். இந்த தோரணமலை பற்றிய பட காட்சியை(சிலேடு) உங்கள் தியேட்டரின் போட்டால் போதும்” என்று சொல்வார்.
பணச் செலவு இல்லாத இறைபணியை யார்தான் விரும்ப மாட்டார்கள். மனமகிழ்ச்சியோடு இடைவேளையின் போது தோரணமலையை காட்டினார்கள்.
அப்படித்தான் தோரணமலையில் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. மேலும் அப்போது வைகாசி விசாகத்தை சிறப்பாக கொண்டாட எண்ணினார். சிறப்பு பூஜையோடு நின்றுவிடாமல் விடிய விடிய பக்தர் கள் அங்கேயே தங்கி இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். அதற்காக த.பி.சொக்கலால் பீடி நிறுவனத்தின் அதிபரை சந்தித்தார். விசாகத் திருவிழா பற்றி எடுத்துக்கூறினார். அவர்களும் கோயிலுக்கு பணம் ஏதும் வேண் டுமா என்று கேட்டனர். “பணம் வேண்டாம், உங்கள் நிறுவனம் சார்பாக இலவசமாக சினிமா படத்தை காட்டினால் போதும்” என்றார். அவர்களும் மனமகிழ்ச்சி யோடு தோரணமலை வந்து விடியவிடிய மூன்று திரைப்படங்களை காட்டினார்கள். கிராமங்களில் திரையரங்குகள் இல்லாத அந்த காலத்தில் இந்த காட்சிகள் பொதுமக்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது.
வைகாசி விசாகத்திருவிழா மக்கள் வெள்ளத்தில் களைக் கட்டியது. மேலும் கலை நிகழ்ச்சிகள் நடத்த சொக்கலால் பீடி நிறுவனத்தினர் ஒரு கலையரங் கத்தையும் கட்டி கொடுத்தனர். அந்த மேடையில் கலைநிகழ்ச்சிகளை நடத்தவும் ஏற்பாடு செய்தார். நாடகங்களும் அங்கு அரங்கேறின. கடையம் அருகே உள்ள வள்ளியம்மாள்புரத்தில் உள்ள திருமுருகன் உயர்நிலைப்பள்ளி மாணவ&மாணவிகள் ஆண்டுதோறும் அங்கு வந்து கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அன்று அந்தப்பள்ளி யின் நிர்வாகி நாடாக்கண்ணு அவர்கள் தொடங்கி வைத்த அந்த சேவையை இப்போது அவரது மருமகளும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் தோரணமலையின் வனப்பை கண்ட சினிமா கலைஞர்கள் அங்கு சினிமா படம் எடுக்க வந்தனர். அவர்களுக்கு ஆதிநாராயணன் அவர்கள் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தவுடன் தங்களுக்கு இடம் கொடுத்து உதவியும் செய்ததற்காக ஒரு கணிசமான தொகையை ஆதிநாராயணனன் அவர்களிடம் கொடுத்தனர். ஆனால் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். மாறாக, எனக்கு நீங்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டுமானால் படத்தில் எழுத்துப்போடும் போது தோரணமலை என்ற பெயரை போடும்படி கேட்டுக் கொண்டார். அதனை புனிதமாக கருதிய படக்குழுவினர் தோரணைமலை என்ற பெயரை படத்தில் சேர்த்தனர்.
மறைந்த இயக்குனர் பரதனின் சாவித்திரி என்ற சினிமாப்படம் (இந்த படத்தில் கதாநாயகியாக நடத்தவர் பிரபல நடிகை கீர்த்திசுரேசின் தாயார் மேனகாதான்) இங்கு அதிக அளவில் படமாக்கப்பட்டது. அந்த படத்தின் வசனத்தில் தோரணமலை என்று குறிப்பிட்டு பேசுவார்கள்.
அதேபோல் டெலிவிஷன் தொடர்களும் இங்கே படமாக்கப்பட்டன. அதிலும் தோரணமலை பெயர் இடம்பெறும்.
இப்படி தோரணமலையின் பெயர் நாலாபுறமும் பரவியதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் வரத்தொடங்கினர். கிராமவாசிகள் மட்டும் வந்த காலம் போய் நகரவாசிகளும் வந்த வண்ணம் இருந்தனர். அவர்களால் மலையில் எளிதாக ஏறமுடியவில்லை.
அப்போதுதான் ஆதிநாராயணன் அவர்கள் பக்தர்கள் எளிதாக மலைமீது ஏற படிக்கட்டுக்கள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்காக பலரை சந்தித்து உதவி கேட்டார். அப்போதும் பணத்தை தாருங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை. உங்களால் இயன்ற படிக்கட்டுகளை கட்டித்தாருங்கள் என்றுதான் வேண்டினார். பக்தர்களும் தங்களால் இயன்ற படிக்கட்டுகளை கட்டிக் கொடுத்தனர். இப்படி திருப்பணிக்கு உதவியவர்கள் பலர்.
இந்த நிலையில்தான் ஆவுடையானூர் டாக்டர் தர்மராஜ் அவர்கள் முருகனின் அருளால் ஈர்க்கப்பட்டார். மலையில் உள்ள லட்சுமி தீர்த்தத்தை புதுப்பித்து அங்கே பக்தர்கள் நீராட வசதி செய்து கொடுத்தார். இதற்காக அந்த டாக்டரே தன் தலையில் செங்கற்களை சுமந்த சம்பவங்களும் உண்டு. அதோடு பண உதவி செய்ய இயலாத பாமர ஏழை பக்தர்களும் திருப்பணி செங்கற்களை கொண்டு சென்றனர்.
ஆதிநாராயணன் அவர்கள் இந்த திருப்பணியை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. இந்த வயதிலும் அவருடைய எண்ணங்கள் அனைத்தும் தோரணமலை முருகனையே வலம் வந்து கொண்டிருக்கிறது. மோட்டார் சைக்கிள்களும், கார்களும் பெருகி விட்ட இந்த காலத்திலும் தனது திருப்பணிக்கு உதவிய மிதிவண்டியை அவர் இன்றும் மறக்கவில்லை.
இயக்குவார் யாரும் இல்லை என்றாலும் அந்த மிதிவண்டி முருகனின் பெயரை சொல்லும் காட்சி பொருளாக அவரது வீட்டில் நின்று கொண்டிருக்கிறது.
வயது முதுமை காரணமாக ஆதி நாராயணன் அவர்களுக்கு அவரது மூத்த மகன் செண்பகராமன் உதவியாக இருக்கிறார். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தோரணமலையின் பெருமையை பறைசாற்றி வருகிறார். அவரது சீரிய முயற்சியின் பேரில் தற்போது தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
வள்ளி&தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு (உற்சவர்) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் வீதிஉலாவும் நடத்தப்படுகிறது.
தற்போது கோயில் திருப்பணி தொடங்க உள்ளது. இதில் கற்களால் ஆன புதிய கட்டிடங்கள், அலங்கார தோரணங்கள் இடம் பெறும். பணி நிறைவு அடைந்தவுடன் குடமுழுக்கும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் பக்தர்களும் தொழில் அதிபர்களும் உதவி செய்து முருகப்பெருமானின் அருளை பெறலாம். கடந்த காலத்தில் திருப்பணியில் உதவியவர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து தொடர்ந்து மலைக்குகை நாயகனாம் முருகப்பெருமானை வந்து தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.
அதேபோல் திருப்பணிக்கு உதவியவர்களை செழுமையாய் வாழ முருகப்பெருமான் அருள் புரிவார்.
(தொடர்புக்கு& செண்பகராமன், கைபேசி எண் 9965762002