தொழில் வளர்ச்சித் தந்த தோரணமலையான்

எதிர்பார்த்த அளவுக்கு படிப்பு கை கொடுக்கவில்லை. நன்றாக படித்து பட்டம் வாங்கியவர்களுக்கு தகுதியான வேலை கிடைப்பதில்லை. நமக்கு... இப்படி எஸ்.கே.ராமரத்தினசாமிக்கு மனதில் ஆயிரம் கேள்வி... அதற்கு விடை, வீட்டைவிட்டு ஓடிப்போவதுதான்... ஆம் சிறுவயதில் அவரது சொந்த ஊரான பூவனூர் அருகே சுப்பனூரில் இருந்து சென்னைக்கு சென்று விட்டார். அங்கு கடையில் வேலைக்குச் சேர்ந்தார். கடுமையாக உழைத்தார். வீட்டைவிட்டு பிரிந்து வந்த அவருக்கு அவரது அண்ணன் ஓரளவு ஆறுதல். ஆனாலும் வாழ்க்கையில் எப்படி முன்னேறப் போகிறோம் என்ற ஏக்கம். அந்த நேரத்தில் அவருக்கு நினைவுக்கு வந்தது தோரணமலை முருகன். அவரையே அடிக்கடி நினைத்துக் கொள்வார்.
அந்த முருகனின் அருளால் சில ஆண்டுகளிலேயே சொந்தமாக கடை வைத்தார். அதன்பின் எப்படியாவது 2 மாதங்களுக்கு ஒருமுறை தோரணமலைக்கு வந்து சாமி கும்பிட்டுவிட்டுதான் செல்வார். கடை விரிவாக்கம் பெற்றதால் வேலைப் பளு அதிகரித்தது. இதனால் தற்போது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இங்கு வந்துசெல்கிறார்.
பொருளாதாரத்தில் எந்த பின்புலமும் இல்லாத அவர் முதலில் சிறிய அளவில் அதாவது 8க்கு 8 என்ற அளவில் கடை வைத்தார். இப்போது அந்தக் கடை 9 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சூப்பர் மார்க்கெட்டாக விரிவடைந்துள்ளது.
அவர் சென்னையில் ஒவ்வொரு காரியத்தில் இறங்கும்போதும் தோரணமலை வந்து முருகப்பெருமானை வணங்கி விட்டுத்தான் தொடங்குவார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
தோரணமலை பக்தனாகிவிட்ட அவர் ஆறுபடை வீடுகளுக்கு மாலை போட்டு சென்றிருக்கிறார். அங்கு சென்று சாமி கும்பிடும்போது அங்குள்ள மூலவர் தோரணமலை முருகனாகவே காட்சி தருவராம்.
இவர் சென்னைக்கு சென்றது 1987-ம் ஆண்டு. சொந்தமாக கடை வைத்தது 1989. தற்போது இவரது நிறுவனத்தில் 25 பேர் வேலை செய்கிறார்கள்.
ராமரத்தினசாமியின் அண்ணன் சென்னையில் தனியாக நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கும் இவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த இவரை அவரது தாயார் கவலைப் படாதே தோரணமலை முருகன் உன்னை கைவிட மாட்டார் என்றாராம். அதேபோல் அவரது அண்ணனும் இணக்கமாகிவிட்டார். அவர் என்ன செய்தாலும் தம்பியிடம் ஆலோசனைக் கேட்பார்.
இவரது பெற்றோர் எஸ்.கடற்கரை நாடார்-கே.செல்லம்மாள். மனைவி பெயர் சந்திரகலா. மகன் ராஜசெல்வம். மகள் செல்பியா.