கோபக்காரரை குளிர வைத்த தெய்வம்
ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் பாலமுருகன். இவரது சொந்த ஊர் மயிலப்புரம் அருகே உள்ள சின்னகுமார்பட்டி. இவர் இதற்கு முன்பு பாவூர்சத்திரத்தில் வேலை பார்த்தபோது மிகவும் கோபக்காரராக இருந்தார். இதனால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். அதன் மூலம் பணத்தை இழந்தார். கடன் வாங்கினார். இதனால் நிம்மதி இன்றி இருந்தார். இந்த நிலையில்தான் தோரணமலைக்கு செல்லத் தொடங்கினார். அன்று முதல் படிப்படியாக அவரது பிரச்சினைக்கு முடிவு வந்தது. கோபம் கொண்டு மலைக்கு வந்த முருகப்பெருமான் இவரது கோபத்தை தணித்தார். மேலும் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினார். அதோடு சேமிப்பும் அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது அவரது வாழ்வில் ஆனந்தம் நிலவுகிறது.
தனக்கு மனமகிழ்ச்சியை தந்த தோரணமலை முருகனுக்கு மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் அன்று பூஜை நடத்த ஏற்பாடு செய்து வருகிறார். அன்று வரும் பக்தர்களுக்கு புளியோதரை பிரசாதமும் வழங்கப்படுகிறது. இந்த பூஜை கடந்த மூன்று ஆண்டுகளாக கார்த்திகை நட்சத்திரம் அன்று காலை 10-30 மணிக்கு தொடங்கி 12 மணிக்கு நிறைவடையும்.
ஒரு தடவை அறியாமல் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒருநாள் முன்னதாக தோரணமலைக்கு சென்று பூஜை செய்துவிட்டார். பின்னர் அறிந்து மறுநாள் இலஞ்சி மற்றும் திருமலை முருகன் கோயிலுக்கு சென்றார். அங்கு முருகப்பெருமானுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அப்போது அவரது எண்ணத்தில் ஏன் தோரணமலையானுக்கும் இப்படி அலங்காரம் செய்யக்கூடாது என நினைத்தார். அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்காக தோரணமலை முருகனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து வருகிறார்கள். அந்த ஒரு நாள் கார்த்திகை நட்சத்திரத்தை முருகப்பெருமான் மறக்கடித்ததும் இந்த சந்தன காப்பு அலங்காரத்திற்குத்தானோ என்கிறார் இந்த பாலமுருகன்.