ஆஞ்சநேய பக்தனை குடும்பஸ்தன் ஆக்கிய முருகன்
சிவகாசியை சேர்ந்த வி.செல்லக்கனி நாடார்- ரெங்கமாள் தம்பதியரின் மகன் குலசேகர பாண்டியன். ஸ்ரீ செல்வ திருப்பதி பைன் ஆர்ஸ் நிர்வாகியான இவர் தோரணமலைக்கு வந்தது பற்றியும் அவருக்கு முருகப்பெருமான் அருளிய விதம் பற்றியும் ருசிகரமாக இங்கே விளக்குகிறார்...
சிவகாசியில் மீரா டாக்கிஸ் என்ற சினிமா தியேட்டர் இருந்தது. அங்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சிலேடு போடுவார்கள். இதில் முதலில் தோரணமலை பற்றிய சிலேடு வரும். இந்த சினிமா தியேட்டர் உரிமையாளர் முஸ்லிமாக இருந்தாலும் அவர் முதலில் இந்த சிலேடைத்தான் போடுவார். அதன்பின்னர்தான் தனது மதம் தொடர்பான சிலேடை போடுவார்.
தோரணமலை பற்றி அந்த சிலேடு மூலம் ஓரளவு அறிந்தேன். அந்த கோயிலுக்கு எப்படியாவது சென்று வருவது என்று முடிவு செய்தேன். தென்காசி&கடையம் பாதையில் உள்ளது என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். மற்றபடி எந்த விவரமும் எனக்கு அப்போது தெரியாது. ஆனாலும் ஏதோ ஓர் உந்து சக்தி என்னை அந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியது.
1975&ம் ஆண்டு எனது நண்பர் என்.எஸ். அசோகனுடன் நான் அந்த கோயிலுக்கு புறப்பட்டேன். சிவகாசியில் தென்காசி வந்து சேர்ந்தோம். அங்கே கோயிலைப் பற்றி விசாரித்தோம். மலை மீது முருகன் கோயில் என்றவுடன் பண்பொழியில் உள்ள திருமலைக் கோயிலா? என்று கேட்டார்கள். நான் இல்லை... இல்லை... தென்காசி&கடையம் சாலையில் உள்ள தோரணமலை என்றேன். அப்போது மாட்டுவண்டிக்காரர் அந்த வழியாக சென்றார். அவரிடம் விசாரித்தபோது அவர்தான் தென்காசி&கடையம் சாலையில் மாதாபுரம் செக்போஸ்ட் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும் என்றும் அங்கிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என்றும் கூறினார். நாங்கள் காலை உணவைக்கூட மறந்து பஸ் ஏறினோம். மாதாபுரம் செக்போஸ்ட் வந்து இறங்கி நடந்தே கோயிலுக்குச் சென்றோம். அங்கிருந்து மலை ஏறி சுனையில் நீராடி முருகப்பெருமானை தரிசனம் செய்தோம். பின்னர் கீழே இறங்கி வந்தோம்.
அப்போதுதான் நாம் காலை உணவையே இன்னும் சாப்பிட வில்லையே என்ற எண்ணம் வந்தது. வயிறும் கடுமையாக பசித்தது. ஆனால்... சாப்பிட ஓட்டல் ஒன்றும் அங்கு இல்லை. நடந்தே செக்போஸ்ட் வந்தோம். அங்கும் ஓட்டல் ஏதும் இலலை. என்ன செய்ய? பஸ் ஏறி தென்காசி வந்து சேர்ந்தோம். பழைய பஸ்நிலையம் அருகே சாப்பிட அவசரப்பட்டோம். அப்போது அங்கு தோரணமலை ஆதிநாராயணன் அவர்கள் இருப்பதை அறிந்தோம். அவரிடம் சென்று கோயிலுக்கு சென்று வந்ததைப்பற்றியும் சாப்பிட ஓட்டல் இல்லாதது பற்றியும் சொன்னோம். உடனே அவர் நாங்கள் சாப்பிட ஏற்பாடு செய்தார். அபார பசி என்பதால் அளவுக்கு அதிகமாகவே உண்டோம். அதற்கான செலவை அவரே ஏற்றுக் கொண்டார்.
அதன்பின் ஆதிநாராயணன் அவர்கள் எனக்கு நெருக்கமாகி விட்டார். அன்றிருந்து மாதந்தோறும் தோரணமலைக்கு வந்து செல்வேன்.
அதன்பின் என் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டன. நான் இளைஞனாக இருந்தபோது தீவிர ஆஞ்சநேய பக்தர். அவர் ஒரு பிரம்மச்சாரி என்பதால் நானும் திருமணமே செய்யக்கூடாது என்று இருந்தேன். என்னைப்போல எங்கள் பகுதியில் சிலரின் எண்ணமும் இருந்தது. நாங்கள் அனைவரும் திருமணம் செய்யாதோர் சங்கம் என்று வைத்துக் கொண்டோம்.
ஆனாலும் முருகன் மீதும் எனக்கு இப்போது பக்தி அதிகரித்து விட்டது. முருகப்பெருமானை அப்பா என்றுதான் அழைப்பேன்.
நாளடைவில் எனக்கும் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
முருகன் அருளால் எனக்கும் ஜமுனாராணிக்கும் 1979 ஜூலை 1&ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கான அழைப்பிதழை தோரணமலை முருகன் முன் வைத்து அவரது ஆசி கிடைக்க எண்ணினேன். இதற்காக சிவகாசியில் உள்ள பால் டெப்போவில் அதிகாலை 5&30 மணி அளவில் பால் வாங்கி தோரணமலை சென்றேன். மலை மீது ஏறி அபிஷேகம் செய்ய பகல் 12 மணி ஆகிவிட்டது. அப்போது பூசாரி அண்ணாமலை என்னிடம் பால் மாதாபுரத்திலா வாங்கினீர்கள் என்று கேட்டார். இல்லை சிவகாசியில் என்றேன். அவர் ஆச்சரியப்பட்டார். காரணம் இவ்வளவு நேரம் பால் கெடாமல் இருக்கிறதே என்று... எல்லாம் முருகனின் அருள்தான் என்றேன். எனக்கு சி.கே.அருண், சி.கே.பிரபு என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவ்வாறு குலசேகரப்பாண்டியன் கூறினார். இவர் கோயில் திருப்பணிக்காக சிவகாசியை சேர்ந்த தொழில் அதிபர்களிடம் நன்கொடை வாங்கி கொடுத்து வருகிறார்.