கஷ்டத்தைப் போக்கும் கந்தசஷ்டி கவசம்.
தோரணமலைக்கு எத்தனையோ அன்பர்கள் உதவி செய்திருக்கிறார்கள். ஆனாலும் ஆவுடையானூரைச் சேர்ந்த எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் தர்மராஜின் திருப்பணி மகத்தானது.
ஒருவர் வாழ்க்கையில் பொருளாதாரத்திலோ தகுதியிலோ குறிப்பிட்ட நிலையை அடைந்தபின் கோயிலுக்கு திருப்பணி செய்ய நினைத்தால் பணத்தை மட்டும் கொடுப்பார்கள். ஆனால் டாக்டர் தர்மராஜ் அவர்கள் பணம் மட்டுமல்ல... தன் உடல் உழைப்பையும் அதிக அளவில் செலுத்தி இருக்கிறார்.
இப்போதும் தினமும் அதிகாலையில் தோரணமலை வந்து மலைமீது ஏறி முருகப்பெருமானை தரிசித்துவிட்டு பின்னர்தான் தனது மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வார். தற்போது தினமும் தொடர்ந்து மலை ஏறி முருகனை வழிபட்டு வருகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பொதுவாக பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த எல்லாக் குடும்பத்தினம் தோரணமலையை தங்கள் குடும்பக் கோயிலாகவே நினைப்பார்கள். கடைசி வெள்ளிதோறும் கண்டிப்பாக சென்று சுனையில் நீராடி முருகனை தரிசித்து வந்துவிடுவார்கள். அதேபோல்தான் டாக்டர் தர்மராஜின் பெற்றோரும். அப்போதெல்லாம் பஸ்வசதி கிடையாது. ஆவுடையானூரில் இந்து நடந்தே செல்வார்கள். டாக்டர் தர்மராஜும் சிறுவனாக இருந்தபோது பெற்றோருடன் சென்று வருவார்.
அப்போதெல்லாம் பக்தியை பற்றி ஒன்றும் தெரியாது. கோயிலுக்குச் சென்றால் மிட்டாய் வாங்கித் தருவார்கள் என்ற ஆசைதான் அதிகமாக இருக்கும். ஆனால் பின்னாளில் முருகன் மீது தனிபக்தியும் தோரணமலை மீது ஈடுபாடும் எப்படி வந்தது என்பதை அவவே விளக்குகிறார்...
நான் சிறு வயதில் என் பெற்றோருடன் தோரணமலை செல்வேன். அப்போதெல்லாம் கோயிலுக்கு செல்கிறோம் என்ற உணர்வை விட சுற்றுலா செல்கிறோம் என்ற உணர்வுதான் அதிகமாக இருக்கும்.
பின்னாளில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் படித்து பயிற்சி மருத்துவராக இருந்தபோது கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் என்பவர் கந்தசஷ்டி கசவனம் பற்றி சொன்னார். அது என்னை மிகவும் கவர்ந்தது. டேப் ரிக்கார்டரில் அதை போட்டு போட்டுக் கேட்டு 3 நாளில் மனப்பாடம் செய்தேன். அதன்பின் கந்தகுரு கவசம் தந்தார். அதில் 470 அடிகளை ஒரு வாரத்தில் மனப்பாடம் செய்தேன். இவை இரண்டையும் படிக்க படிக்க எனக்கு முருகப்பெருமான் மீது அதிக பக்தியும் பற்றும் ஏற்பட்டது.
தஞ்சவூரில் இருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுவாமி மலை முருகன் கோயிலுக்கு நண்பர்களுடன் நடந்தே சென்று வந்தேன். பின்னர் நண்பர்களுக்கு நடந்து வர இயலவில்லை. இதனால் நான் தனியாக நடந்தே சென்று வந்தேன். நான் கராத்தே பயிற்சி பெற்றவன் என்பதால் நான்கரை மணி நேரத்தில் ஓட்டமும் நடையுமாக கோயிலுக்கு சென்றுவிடுவேன். மொத்தம் 6 முறை இப்படி நடந்தே சென்றுள்ளேன்.
அந்த பக்தி ஊருக்கு வந்து மருத்துவமனை தொடங்கியதும் தோரணமலை மீது விழுந்தது. எனக்கு ஏதாவது கஷ்டமோ, கவலையோ, மன உளைச்சலோ வந்தால் உடனே தோரணமலை முருகனை நினைத்து கந்தசஷ்டி கசவம் படிப்பேன். அடுத்த நொடியில் கவலைகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும். பிரச்சினை என்னால் அது தீர வழியும் கிடைத்துவிடும்.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடக்கும்போது சிலருக்கு எலும்புகள் சரியாக பொருந்தாது. உடனே என் மனதுக்குள் கந்தசஷ்டி கவசம் சொல்வேன். எலும்புகள் சரியாக பொருந்து அந்த நோயாளி விரைவில் குணம் அடைந்துவிடுவார்.
திருமணம் ஆகி மூத்த மகள் கைக்குழந்தையாக இருக்கம்போது கடைசி வெள்ளி அன்று மனைவி&குழந்தையுடன் தோரணமலை ஏறினோம். வழியில் சுனை பறையில் மலைத்தேனி கூடு இருந்தது. யாரோ சிறுவர்கள் அதன்மீது கல் எறிய, தேனீக்கள் பறந்து வந்தது. என் மனைவி பயந்துவிட்டார். நான் வீட்டில் வளர்க்கும் தேனீக்களைப் போல அசையாமல் இருந்தால் கடிக்காது என்று கூறினேன். ஆனால் தேனீக்கள் எங்கள் மூவரையும் பதம் பார்த்துவிட்டது. மனைவி அலறினார். கையில் குழந்தையையும் மனைவியை தைத்தாங்கலாகவும் அழைத்துக்கொண்ட கீழே வந்தேன. வீட்டுக்கு வந்து குளுக்கோஸ் ஏற்றி உடல்நிலையை சரி செய்து கொண்டோம். இந்த சம்பவம் என் மனைவிக்கு கோபத்தை ஏற்படுத்துமோ என்று கவலை பட்டேன். ஆனால் அவர் அந்த சம்பவம் ஆங்கிலப்படம் பார்த்ததுபோன்ற உணர்வு ஏற்பட்டது என்றார். தோரணமலையில் இடையூறுகள் வந்தாலும் அது இன்பத்தில் போய் முடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
ஒரு முறை நான் நண்பர்களுடன் காரில் தோரணமலை சென்றேன். வழியில் உள்ள ஓடை அருகே கார் விபத்துக்குள்ளானது. அதில் முருகன் அருளால் நாங்கள் உயிர் பிழைத்தோம்.