கனவில் வந்து வழிகாட்டிய தோரணமலையான்

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர் நம்மாழ்வார். ஆழ்வார் திருநகரில் பிறந்த இவர் 16 ஆண்டுகள் கண்திறக்காமல் புளியமரப்பொந்தில் வசித்தவர். இவர் மகாவிஷ்ணு அருள்பாலிக்கும் எந்த திவ்யதேசத்திற்கும் நேரில் செல்லாமல் அதன் இருப்பிடத்தையும் சிறப்புகளையும் தன் பாடலில் வடித்தார்.
அவர் நேரில் காணாததை காணவைத்தார் பெருமாள். அதேபோல் ஒரு பக்தருக்கு இதுவரை காணாத கேள்விப்படாத தோரணமலையை முருகப்பெருமான் கனவில் காட்டினார். அந்த பக்தர் பெயர் ஏ.சுப்பிரமணியன். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வல்லத்திரா அருகே உள்ள நம்புகுளி கிராமத்தைச் சேர்ந்தவர். காண்டிராக்டரான இவர் விவசாயமும் செய்து வருகிறார்.
இவர் ஒருநாள் கனவில் யானைபோன்ற மலை தென்பட்டது. அந்த கோயிலுக்கு இவர் செல்கிறார். அங்கே பரிவட்டம்கட்டி யானை ஒன்று மாலைபோட்டு வரவேற்கிறது.
கனவு பற்றி அவர் பொருட்படுத்தவில்லை. அதன்பின் சில நாட்கள் கழித்து அவரது வீட்டுக்கு வந்த நாளிதழ் ஒன்றில் தோரணமலை படமும் அந்த கோயில் பற்றியும் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.
அந்த படத்தை பார்த்ததும் அவருக்கு ஆனந்த அதிர்ச்சி. ஆம், கடந்த சில தினங்களுக்கு முன்பு கனவில் கண்ட கோயில்தான் அது. என்ன ஆச்சரியம் இதுவரை அந்த கோயிலை பார்த்தது இல்லை. ஏன் இதுவரை அது பற்றி கேள்வி பட்டதும் கிடையாது. உடனே அந்த நாளிதழில் எழுத்திய கோயில் சிறப்புகளை படித்தார்.
பின்னர் அந்த கோயிலுக்கு வந்தார். முருகப்பெருமானே அழைத்த அந்த கோயிலை அடைந்ததும் விநாயகப் பெருமான் அவரை விரவேற்பதாகவே அவர் உணர்ந்தார். மலைமீது ஏறி முருகப்பெருமானை தரிசித்தார். மலையில் வளர்ந்திருந்த மூலிகைகளும், சுனை நீரும் அவருக்கு புத்துணர்வை தந்தது.
அன்று முதல் அவரது வாழ்வில் பல முன்னேற்றங்களை கண்டார். தொழில் விருத்தி அடைந்தது. விவசாயமும் செழித்தது. அது மட்டுமல்ல, தோரண மலையானை நினைத்து வந்து வழிபட்டால் நினைத்ததெல்லாம் கைகூடியது. எந்தவித மனக்கஷ்டம் என்றாலும் தோரணைமலை முருகனை மனத்தில் நினைத்தாலே அந்த கலக்கம் காணாமல் கரைந்து போகும் என்கிறார் சுப்பிரமணியன்.
இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு எஸ்.கார்த்திகேயன், எஸ்.தர்மபிரபு என்ற மகன்கள் உள்ளனர். கார்த்திகேயனுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.