அகத்தியர் செய்த கபால அறுவை சிகிச்சை

பொங்கி வரும் பொருனை நதியால்(தாமிரபரணி) பொன்விளையும் பூமியாக விளங்குகிறது திருநல்வேலி, தென்காசி பகுதி. மலையும் மலைசார்ந்த நிலமும், கடலும் கடல்சார்ந்த கழனியும் நிறைந்த அந்த அற்புத பகுதியை ஆண்டு வந்தான் காசிவர்மன்.
எண்ணற்ற வளங்கள் நிறைந்திருந்தும், ஏழ்மை இன்றி மக்கள் வாழ்தாலும், எதிரியே இல்லாத நாடாக விளங்கினாலும், நாட்டை ஆளும் மன்னனுக்கு மட்டும் ஏன் இந்த உபாதை? ஆம் மன்னன் காவிவர்மனுக்கு தீராத தலைவலி. எத்தனையோ வைத்தியர்கள் வந்தும் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. தலைவலிக்கான காரணமும் யாருக்கும் புலப்படவில்லை.
இந்த நேரத்தில்தான் குறுமுனி அகத்தியர் தோரணமலைக்கு வந்திருப்பதாகவும், இறைவனின் அருளே நேரடியாக பெற்றவர் என்பதால் அவரால் முடியாதது எதுவுமே இல்லை என்பதால் அவரிடம் மன்னரை காட்டலாம் என்று கூறப்பட்டது.
மன்னன் காசிவர்மனும் உடனே அகத்தியரை காண விரைந்தான்.
“முனிவரே என் தலைவலியை குணமாக்க வேண்டும்” என்று மன்னன் வேண்டினான்.
அகத்தியர் மன்னனின் நாடியை பார்த்து,
“மன்னா உனது தலைவலிக்கு ஒரு விசித்திரமான தலைவலி. அந்த தலைவலிக்கு காரணம் ஒரு தேரை.”
“என்ன தேரையா?”
“ஆம் தவளை இனத்தைச் சேர்ந்த தேரைதான் அதற்கு காரணம்.”
“அது எங்கே என்று உங்கள் ஞானக்கண்ணால் கண்டு பிடித்து கூறுங்கள். அதை பிடித்து அழிக்கிறேன். சொல்லுங்கள் சாமி” & ஆவேசத்தில் கத்தினான் மன்னன்.
“மன்னா ஆத்திரம் கொள்ள வேண்டாம். அந்த தேரை வேறு எங்கும் இல்லை. உன்னிடத்தில்தான் இருக்கிறது.”
“என்ன என்னிடத்திலா?”
“அது உனது தலைக்குள் புகுந்திருக்கிறது.”
இப்போது மன்னனுக்கு வியப்பும் அச்சமும் ஏற்பட்டது. “தேரை என் தலைக்குள்ளா? அது எப்படி? நம்ம முடியவில்லையே?”
“பாறைக்குள்ளேயே புகுந்திருக்கும் தேரையால் உன் தலைக்குள் புகுந்து கொள்ள முடியாதா என்ன? நீ வனத்தில் தூங்கும்போது கண்ணுக்கு தெரியாத அவளவில் உள்ள தேரை உன் நாசி வழியாக தலைக்குள் புகுந்துவிட்டது. அது தற்போது வளர்ந்த நிலையில் உள்ளது. அதனால்தான் உனக்கு இந்த தலைவலி. அதற்கு கபால அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்” என்றார் அகத்தியர்.
மன்னனுக்கு அறுவை சிகிச்சை தோரணமலையில் தொடங்கியது.
மூலிகை¬யால் மன்னனை மயக்கமடையச் செய்யதார் அகத்தியர். பின்னர் தலையை இரண்டா பிளந்தார். அப்போது அங்கே தேரை இருப்பதை கண்டார். மூளைக்கோ, தலையில் உள்ள சிறு நரம்புகளுக்கோ எந்த விதமான சேதமும் இல்லாமல் தேரையை எப்படி எடுப்பது என்று அகத்தியர் யோசித்துக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அவரது சீடன் ராமத்தேவன் ஒரு சட்டியில் தண்ணீரை எடுத்து வந்தார். அதை மன்னனின் தலை அருகே வைத்து ஒரு குச்சியால் அலசி, சலசலவென சத்தத்தை உருவாக்கினார். தண்ணீர் சத்தத்தை கேட்ட தேரை தாவிக்குதித்து தண்ணீருக்குள் விழுந்தது.
அடுத்த நொடியில் சந்தான கரணீ மூலிகையால் பிளந்த தலையை அகத்திய முனிவர் ஒட்ட வைத்தார். மயக்கம் தெளிந்து எழுந்த மன்னன் தலைவலி குணமானதை உணர்ந்தார். அகத்திய முனிவருக்கும் அவரது சீடர் ராமதேவனுக்கும் நன்றியை தெரிவித்து சென்றான்.
அதன்பின் சமயோதமாக தண்ணீரை கொண்டு வந்து தேரையை வெளியேற்றிய சீடன் ராமதேவை அகத்தியர் புகழ்ந்தார். மேலும் தேரையை வெளியே கொண்டு வந்ததால் அவருக்கு தேரையர் என்ற படத்தையும் அகத்தியர் வழங்கினார்.
மேலும் இந்த தோரணமலையில் இருந்து மருத்துவ சேவையை செய்யும்படி பணித்துவிட்டு அகத்திய முனிவர் பொதிகை மலை நோக்கி சென்றார்.
அதன்பின் தேரையர் (ராமதேவன்) தோரணமலையில் நீண்ட காலம் இருந்து அங்கேயே ராமதேவன் முக்தி அடைந்தார்.